மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் 55 ஓவர்களிலேயே முடித்து வைக்கப்பட்டபோது, இந்தியா ஐந்து விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்திருந்தது.
ரஹானே 38 ரன்கள் மற்றும் ரிஷப் பந்த் 10 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.
முன்னதாக, ப்ரித்வி ஷா, புஜாரா ஆகியோர் முறையே 16 மற்றும் 11 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கேப்டன் விராட் கோலி வெறும் இரண்டு ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரிலும் விளையாடியுள்ளது.
டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் இந்தியா வெல்ல, ஒருநாள் போட்டித் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று பழி தீர்த்தது நியூசிலாந்து அணி.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையின்படி இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி முதலிடத்திலும் நியூசிலாந்து அணி நான்காம் இடத்திலும் உள்ளன.
அடுத்த ஆண்டு ஐசிசியின் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்துக்கான இறுதிப்போட்டி நடைபெறவுள்ள நிலையில், அதில் பங்கேற்கும் ஒன்பது அணிகளில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.