“சிவப்பு சட்டை நிருபருக்குப் பதில் சொல்ல முடியாது” துரைமுருகன்

வழக்கம்போல் இன்று சட்ட மன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தது திமுக. அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த திமுக பொருளாளர் துரைமுருகன், “சிவப்பு சட்டை அணிந்தவருக்குப் பதில் அளிக்க மாட்டேன், பக்கத்திலிருக்கும் பச்சை சட்டைக்குப் பதில் சொல்கிறேன்” எனக் கூறிவிட்டு சிரித்துக் கொண்டார்.


குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வர வேண்டும் எனத் தீர்மானம் ஒன்றைச் சட்ட மன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த தீர்மானம் தொடர்பாக ஸ்டாலின், சபாநாயகர் தனபாலிடம் நேற்று கேட்டபோது பரிசீலனையிலிருப்பதாகத் தெரிவித்தார்.

 

அதைத்தொடர்ந்து ஸ்டாலின் இன்று சட்ட மன்றத்திற்கு வரவில்லை. இதனால் சட்ட மன்ற துணைத் தலைவர் துரைமுருகன் தலைமையில் திமுக இன்று சட்ட மன்றத்தில் இயங்கியது. இந்நிலையில், குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிரான தீர்மானத்தை இன்று நிறைவேற்ற வேண்டும் என துரைமுருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்குப் பதிலளித்த சபாநாயகர் தனபால், “இன்றும் தீர்மானம் பரிசீலனையில் உள்ளது” எனத் தெரிவித்தார். நடப்புக் கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று தீர்மானம் பரிசீலனையில் உள்ளது எனக் கூறியதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக பொருளாளர் துரைமுருகன் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.