நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகளை உங்களுக்கு தொகுத்து வழங்குகின்றோம்.
தி ஹிண்டு- அவநம்பிக்கையே நீடித்த மந்த நிலைக்கு காரணம்- மன்மோகன்சிங்
"தி ஹிண்டு ஆங்கில நாளிதழில் இந்தியாவின் பொருளாதர நிலை குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கட்டுரை எழுதியுள்ளார்.
இந்தியாவின் பொருளாதார நிலை ஆழமான கவலையைத் தருகிறது. இதை எதிர்க்கட்சி உறுப்பினராக அல்ல, நாட்டின் குடிமகனாக, பொருளாதார மாணவனாக கூறுகிறேன். இப்போது உண்மைகளே சாட்சிகளாகியுள்ளன.
மொத்த உள்நாட்டு உற்பத்தி ஜி.டி.பி. 15 ஆண்டுகளில் இல்லாத அளவு கீழே போயுள்ளது. வேலையின்மை 45 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகமாக உள்ளது. வீட்டு நுகர்வு 4 பதிற்றாண்டுகளில் இல்லாத அளவு கீழே போயுள்ளது. வங்கி வராக் கடன் எப்போதும் இல்லாத அளவு உச்சத்தில் உள்ளது. மின்சார உற்பத்தி வளர்ச்சி 15 ஆண்டுகள் இல்லாத அளவு குறைந்துள்ளது.
இது போல கீழே போயிருப்பவற்றின், அதிகமாயிருப்பவற்றின் பட்டியல் நீள்கிறது. வருத்தம் தரும் இத்தகைய புள்ளிவிவரங்களால் பொருளாதார நிலை கவலை தருகிறது என்று கூறவில்லை. நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் மேலும் ஆழமான சிக்கலின் வெறும் வெளிப்பாடுகள் மட்டுமே இவை" என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் மன்மோகன் சிங்.
தொழில் முனைவோரிடம், வங்கியாளர்களிடம், தொழிலதிபர்களிடம் அச்சம் நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், மக்களுக்குள்ள அவநம்பிக்கையும், அச்சமும், நம்பிக்கையின்மையும், நீடித்த மந்த நிலைக்கு காரணமாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசனின் 60 வருடத் திரை வாழ்க்கையைக் கொண்டாடும் விதமாக, `உங்கள் நான்` என்ற இசை நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
அதில் நடிகர் ரஜின்காந்த் உட்பட பல நடிகர்கள் கலந்து கொண்டனர் என்கிறது தினமணியின் செய்தி.
அப்போது பேசிய ரஜினி, "கமலுக்கும், எனக்குமான நட்பு உயிரோட்டமானது. அதை யாராலும் உடைக்க முடியாது. நாங்கள் இருவருமே எங்களின் வளர்ச்சிக்காக எங்கள் ரசிகர்களை பயன்படுத்திக் கொண்டதில்லை.
எங்கள் இருவருக்கும் வேறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால் அரசியலுக்கு வந்தால் எங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்ள மாட்டோம்.
மேடையில் நிறைய பேர் அரசியல் சார்ந்து பேசினார்கள். தான் தமிழ்நாட்டின் முதல்வர் ஆகமுடியும் என்று எடப்பாடி பழனிசாமி, சில ஆண்டுகளுக்கு முன் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.
அவர் முதலமைச்சர் பதவிக்கு வந்ததும், இருபது நாள்களுக்குக் கூட அந்த பதவியில் அவர் இருக்க மாட்டார் என்றும் சொன்னார்கள்.
அவர் அந்தப் பதவிக்கு வந்தது அதிசயம். நேற்று அதிசயம் நடந்தது, இன்றும் அதிசயம் நடக்கிறது, நாளையும் அதிசயம் நடக்கும்"
என்று கூறியதாக விவரிக்கிறது அச்செய்தி.