உலகிலேயே மிக குறைந்த விலையில் மொபைல் டேட்டா (இணையதள வசதி) வசதியை பெற்றுவரும் இந்திய வாடிக்கையாளர்கள், இரண்டு தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்களின் மொபைல் டேட்டா கட்டணத்தை உயர்த்தபோவதாக அறிவித்துள்ளதால், இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிவரும்.
வோடஃபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் ஆகிய இரு நிறுவனங்களும் தங்களின் இரண்டாவது காலாண்டு இழப்புகள் கிட்டத்தட்ட 10 பில்லியன் டாலர்கள் அளவுக்கு இருப்பதாக அறிவித்தபிறகு இந்த செய்தி வெளிவந்துள்ளது.
இந்த இரு நிறுவனங்களும் இந்திய தொலைதொடர்பு சந்தை மதிப்பில் பாதியளவுக்கு மேல் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.
ஆனால், இந்த மொபைல் டேட்டா கட்டண அதிகரிப்பு உடனடியாக நடக்காது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
''மேற்கத்திய நாடுகள் அல்லது வளர்ந்த பொருளாதாரத்தை கொண்ட ஆசிய நாடுகளான கொரியா, ஜப்பான் அல்லது சீனாவுடன் ஒப்பிட்டால் இந்தியாவில் மொபைல் டேட்டா கட்டணம் அந்த அளவுக்கு அதிகம் இல்லை. மேலும் மொபைல் டேட்டா கட்டணம் அதிகரித்தாலும், அந்த நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் இந்த கட்டணம் குறைவாகவே இருக்கும்'' என்று தொழில்நுட்ப நிபுணரான பிரசான்டோ ராய் பிபிசியிடம் தெரிவித்தார்.
- இந்தியாவை விட்டு வெளியேறுகிறதா வோடஃபோன் நிறுவனம்?
- நஷ்டத்தில் வோடாஃபோன் நிறுவனம்: நீங்கள் ஏன் கவலை கொள்ள வேண்டும்?
''தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களின் நோக்கம், வாடிக்கையாளர்களை தங்களின் சேவையை பயன்படுத்த செய்வதும், அதன் மூலம் தங்களின் வருவாயை அதிகரிப்பதும் தான். மேலும் தாங்கள் செலுத்த வேண்டிய லைசன்ஸ் கட்டணத்தில் எஞ்சிய கட்டணத்தை குறைத்து கொள்ளுமாறு அரசை கேட்டுக் கொள்வதும்தான்'' என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக, இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் இந்தியா, தனது இரண்டாவது காலாண்டில் 510 பில்லியன் ரூபாய் இழப்பை எதிர்கொள்வதாக தெரிவித்தது.
மேலும் இந்த இழப்பால் வோடோஃபோன் நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறுமா என்ற அச்சமும் நிலவுகிறது. இது தொழில்துறையின் நிலை குறித்த அச்சத்தை மேலும் அதிகரிக்கிறது.
ஏன் நிறுவனங்கள் கட்டண உயர்வு செய்கின்றன?
இது குறித்து பொருளாதார நிபுணர் விவேக் கவுல் பிபிசியிடம் விவரிக்கிறார்.
ஆரம்பகட்டத்தில் தொலைப்பேசி அழைப்புகளுக்கான கட்டணம் தொடர்ந்து குறைந்து வந்தாலும், மொபைல் டேட்டாவின் கட்டணம் அதிகரித்தபடியே இருந்தது.
ஆனால், ரிலையன்ஸ் ஜியோ சந்தையில் நுழைந்த பின்னர் இந்த நிலை முற்றிலும் மாறியது.