நவம்பர் 20ஆம் தேதிக்கு பிறகு, தானும் தன் அமைப்பை சேர்ந்த நான்கு பெண்களும் சபரிமலைக்கு செல்வோம் என்கிறார் 34 வயது செயற்பாட்டாளரான த்ருப்தி தேசாய்.
அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று 2018ஆம் ஆண்டு, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து, கோயிலுக்கு செல்வதற்காக பல மணி நேரம் கொச்சி விமான நிலையத்தில் காத்திருந்தார் த்ருப்தி தேசாய். ஆனால், பெரும் போராட்டம் நடந்ததை தொடர்ந்து அவர் திரும்பிச் சென்றார்.
இது தொடர்பான மறுசீராய்வு மனுவில் கடந்த வாரம் தீர்ப்பு அளித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கை ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்தது. இந்நிலையில், சபரிமலைக்கு வரும் பெண் செயற்பாட்டாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்று கேரள அரசு அறிவித்துள்ளது.
நவம்பர் 16ம் தேதியில் இருந்து, இரண்டு மாதங்களுக்கு சபரிமலை நடை திறக்கப்பட்டுள்ளது.
எப்படி தடுத்து நிறுத்த முடியும்?
"கோயிலுக்குள் செல்ல எந்த தடையும் இல்லை. எப்படி எங்களை தடுத்து நிறுத்த முடியும்" என்று கேள்வி எழுப்புகிறார் தேசாய்.
கோயிலுக்குள் நுழைய உச்சநீதிமன்றத்திடம் அனுமதி வாங்குமாறு கேரள அரசாங்கம் கூறுவது தீர்ப்பை அவமதிப்பது போன்றது என்று கூறும் அவர், பக்தர்களையும், செயற்பாட்டாளர்களையும் எவ்வாறு வேறுபடுத்த முடியும்? "நாங்கள் இரண்டுமேதான்" என்று கூறுகிறார்.
ஆனால், இந்த விவகாரத்தில் பல பெண்கள் பல்வேறு விதமான கருத்துகளை கூறுகிறார்கள்.